ADDED : ஆக 22, 2026 07:05 AM

ஐ.டி.பி.ஐ., வங்கியை வாங்க பேர் பாக்ஸ் தீவிரம்
ஐ.டி.பி.ஐ., வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி., வைத்துள்ள பங்குகளை வாங்கும் போட்டியில் கனடாவின் பேர் பாக்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. சி.எஸ்.பி., வங்கியில் 40 சதவீத பங்கு வைத்துள்ள பேர் பாக்ஸுக்கு, அந்தப் பங்குகளை விற்க அல்லது ஐ.டி.பி.ஐ.,யுடன் இணைக்க 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
ரூ.17,200 கோடி ஆர்டர் வெல்ஸ்பன் கார்ப் பெற்றது
வெல்ஸ்பன் கார்ப் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் குழாய்களை வழங்குவதற்காக 17,200 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய ஆர்டரை பெற்றுள்ளது. இதன் வாயிலாக, நிறுவனத்தின் உலகளாவிய ஆர்டர் மதிப்பு கிட்டத்தட்ட 42,100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆர்டர் 2028 - 29ம் நிதியாண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
டேட்டா பேட்டர்ன்ஸுக்கு ரூ.585.76 கோடிக்கு ஆர்டர்
டேட்டா பேட்டர்ன்ஸ் நிறுவனம், பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரேடார் எலக்ட்ரானிக்ஸ் வழங்குவதற்காக 585.76 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீதம் உயர்ந்து, முதல் முறையாக 5,000 ரூபாயை கடந்தது. ஜூலை 30, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு 2,654 கோடி ரூபாயாக இருந்தது.
டாடா கார்கள் விலை ரூ.25,000 வரை உயர்கிறது
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மற்றும் எஸ்.யு.வி.,க்களின் விலை, வரும் செப்டம்பர் 1 முதல் ரூ.25,000 வரை உயர்த்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் என அனைத்து மாடல்களுக்கும் விலை உயர்வு பொருந்தும். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தத்தை ஈடுகட்ட இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல் மற்றும் வகைக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும்.
ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் ஆனந்த் மஹிந்திரா, சோமநாத்
ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழுவில் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சோமநாத் பகுதி நேர, அரசு சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 20 முதல் 4 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை சோமநாத் பதவியில் இருப்பார் என ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
