ADDED : செப் 02, 2026 02:51 AM

ரிலையன்ஸ் ஐஸ்கிரீம் 'பாம்பே கிரீமரி'
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எப்.எம்.சி.ஜி., பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், 'பாம்பே கிரீமரி' என்ற பெயரில் ஐஸ்கிரீம் விற்பனையில் களமிறங்கி உள்ளது. இதன் ஆரம்ப விலை 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பே கிரீமரி ஐஸ்கிரீம்கள், விரைவில் நாடு முழுதும் விற்பனைக்கு வரவுள்ளன.
'பார்லே' பிஸ்கட்ஸ் புதிய சி.இ.ஓ., ஜார்ஜ் கோவூர்
பார்லே பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜார்ஜ் கோவூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்சிகோ நிறுவனத்தில் பல்வேறு தலைமை பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் இந்திய பானங்கள் பிரிவின் மூத்த துணை தலைவராகவும் பணியாற்றினார்.
மருந்து விலை குறைப்புக்கு 'சன் பார்மா' ஒப்பந்தம்
அமெரிக்காவில் சன் பார்மா நிறுவனத்தின் புதிய மருந்துகளின் விலையை, பிற வளர்ந்த நாடுகளில் வசூலிக்கப்படும் குறைந்தபட்ச விலைக்கு இணையாக குறைக்க அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப் படுத்தப்படும் மருந்துகளுக்கும் இதே விலை முறையை பின்பற்ற சன் பார்மா ஒப்புக்கொண்டுள்ளது.
ரூ.2,329 கோடி ஏற்றுமதி ஆர்டர் பெற்றது ஹெச். .எப்.சி.எல்.,
உயர்தர ஆப்டிகல் பைபர் கேபிள்களை தயாரித்து வழங்குவதற்காக 2,329 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் ஹெச்.எப்.சி.எல்., நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. ஒரு சர்வதேச நிறுவனத்திடமிருந்து கிடைத்துள்ள இந்த ஆர்டர், 2029 டிசம்பர் வரை செயல்படுத்தப்படும்.
' கோல்' இந்தியா நிலக்கரி உற்பத்தி 5.7% சரிவு
கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆகஸ்டில் 5.7 சதவீதம் சரிந்து, 4.75 கோடி டன்னாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 5.04 கோடி டன்னாக இருந்தது. அதேநேரம், நிலக்கரி வினியோகம் 5.5 சதவீதம் அதிகரித்து, 6.06 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கார் தயாரிப்பு திட்டம் 'வின்பாஸ்ட்' நிறுத்தம்
இந்தியாவில் வி.எப்.3, வி.எப்.6, வி.எப்.7 ஆகிய மின்சார கார்களை
தயாரிக்கும் திட்டத்தை வியட்நாமை சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனம் தற்காலிகமாக
நிறுத்தியுள்ளது. செலவுகளை மறுமதிப்பீடு செய்யும் வகையில், திட்டங்களில்
பணிகளை நிறுத்துமாறு சப்ளையர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
