தங்க நகை கடன் வழங்குவதில் வங்கிகள் மீது விதி மீறல் புகார்
தங்க நகை கடன் வழங்குவதில் வங்கிகள் மீது விதி மீறல் புகார்
ADDED : பிப் 17, 2024 01:14 AM

புதுடில்லி:தங்க நகைக்கு எதிராக கடன் வழங்கும் வங்கிகள், விதிகளை மீறுவதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, 'தங்க கடன் நிறுவனங்களின் சங்கம்' ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு சொத்து மதிப்புக்கு எதிராக எவ்வளவு கடன் வழங்க வேண்டும் என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் விகிதம் எல்.டி.வி., என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் மக்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில், விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக, அடகு வைக்கப்படும் தங்க நகைகளுக்கு எதிரான எல்.டி.வி.,யை ரிசர்வ் வங்கி 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தியது.
மேலும் இந்த சலுகை, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது வரை பல வங்கிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் நகைகளுக்கு எதிராக வழங்கப்படும் கடன் தொகையை, அதே விகித அடிப்படையில் வழங்கி வருவதாக, தங்க கடன் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
சில பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தொடர்ந்து எல்.டி.வி., விதிகளை மீறி செயல்பட்டு வருவதால், நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளோம்.
அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், சொத்து மதிப்புக்கு எதிராக 75 சதவீதம் தான் கடன் வழங்க வேண்டும் என்ற விதி பொதுவானது.
கொரொனா காலத்தின் போது தளர்த்தப்பட்ட விதிகள் திரும்பப் பெறப்பட்ட பின்னும், தொடர்ந்து பல வங்கிகள் 80 முதல் 90 சதவீதம் வரை கடன் வழங்கி வருகின்றன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.