யு.ஏ.இ., வழியாக இந்தியாவில் பொருட்களை குவிப்பதாக புகார் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமா?
யு.ஏ.இ., வழியாக இந்தியாவில் பொருட்களை குவிப்பதாக புகார் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமா?
ADDED : அக் 16, 2024 10:54 PM

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, வேறு நாடுகள் தங்களது வெள்ளிப் பொருட்கள், பிளாட்டினம் அலாய், உலர்பேரீச்சை ஆகியவற்றை யு.ஏ.இ., வழியாக இந்தியாவுக்குள் குவித்து அதிக லாபம் ஈட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. அதன்படி, இருதரப்பிலும் கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, இறக்குமதிக்கு அனுமதி உள்ளது.
ஆனால், இதை சாதகமாகப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு அதிக அளவில் வெள்ளிப் பொருட்கள், பிளாட்டினம் அலாய் மற்றும் உலர்பேரீச்சையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்றுமதி செய்வது குறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்தது.
இது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தவறாகப் பயன்படுத்துவதாகி விடும் என்றும் கூறியிருந்தது.
இரு நாடுகள் இடையே, கடந்த 14ம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சின்போது, இந்த பிரச்னையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது.
இதையடுத்து, இந்தப் பொருட்களின் அதிக அளவு ஏற்றுமதி குறித்து ஆய்வு செய்வதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதி அளித்திருக்கிறது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் ஏற்றுமதி நடக்கிறதா, தடையற்ற வர்த்தக ஒப்பந்த விதிகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என, எமிரேட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தவறாகப் பயன்படுத்தி, வேறு சில நாடுகள் தங்களது பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக இந்தியாவுக்குள் குவிக்கின்றனவோ என்ற சந்தேகத்தை இது கிளப்பியுள்ளது.
l இந்தியாவின் 3வது மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
l கடந்த நிதியாண்டில் இருதரப்பு வர்த்தக மதிப்பு 7.02 லட்சம் கோடி ரூபாய்
l யு.ஏ.இ., உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2022 மே 1ல் அமலுக்கு வந்தது