இந்தியாவில் கணினி விற்பனை செப்., காலாண்டில் புதிய உச்சம்
இந்தியாவில் கணினி விற்பனை செப்., காலாண்டில் புதிய உச்சம்
ADDED : நவ 28, 2024 10:44 PM

புதுடில்லி:நாட்டில் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், பி.சி., எனும் 'பெர்சனல் கம்ப்யூட்டர்'களின் விற்பனை, 45 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக உலக தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
'டெஸ்க்டாப், நோட்புக்' ஆகிய அனைத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற பிரிவில் கீழ் வருகின்றன. இவற்றின் விற்பனை நடப்பாண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 0.10 சதவீதம் அதிகரித்து, 44.90 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் - ஜூன் காலாண்டில் இது, 33.90 லட்சமாக இருந்தது.
இது தொடர்பாக உலக தரவு மையத்தின் இந்தியாவுக்கான ஆராய்ச்சி மேலாளர் பரத் ஷெனாய் கூறுகையில், “பொதுவாக அக்டோபர் இரண்டாம் வாரத்தில் துவங்கும் இ - டெய்ல் எனும் மின்னணு சில்லரை விற்பனை, நடப்பாண்டு செப்டம்பர் மாத இறுதியிலேயே துவங்கியதால், அதிக எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. நிறுவனங்களும் அதிக தள்ளுபடி, சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்கியதன் வாயிலாக தங்களது விற்பனையை அதிகரித்தன,” என கூறினார்.
செப்டம்பர் காலாண்டில் நோட் புக் விற்பனை 2.80 சதவீதம் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, 84,000 ரூபாய்க்கு அதிகமான பிரீமியம் நோட் புக்குகளின் விற்பனை 7.60 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், டெஸ்க்டாப்களின் விற்பனை, 8.10 சதவீதம் குறைந்துள்ளது.