அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., முதலீடு சர்ச்சை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., முதலீடு சர்ச்சை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
ADDED : அக் 26, 2025 01:27 AM

புதுடில்லி: பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதானி குழும நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்திஉள்ளது.
பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பை மீட்டெடுக்க மத்திய அரசு அதிகாரிகளின் உந்துதலின் பேரில், எல்.ஐ.சி., நிறுவனம் கடந்த மே மாதம் 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக அமெரிக்க செய்தி நிறுவனமான 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டது.
இதை அடிப்படையாகக் கொண்டு, சாமானிய மக்களின் சேமிப்புகளை அதானி குழுமத்தின் நலனுக்காக தவறாக பயன்படுத்துவதாக, எல்.ஐ.சி., மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அதே நேரத்தில் இவை அனைத்தும் தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டு கள் என எல்.ஐ.சி., மறுத்து உ ள்ளது.
என்ன பிரச்னை? இந்தியாவில் சோலார் மின்சார கான்ட்ராக்ட்களை பெற லஞ்சம் வழங்கியதாகவும், இதை பயன்படுத்தி அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், கவுதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது கடந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால், அதானி குழும நிறுவனங்கள் மற்றும் இதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.,யின் பங்கு விலை கடும் சரிவைக் கண்டது.
இந்த விவகாரத்துக்கு பின், அதானி குழுமம் கடனை திருப்பி செலுத்த தடுமாறி வந்ததாகவும்; இந்த சிக்கலில் இருந்து குழுமத்தை காப்பாற்ற, எல்.ஐ.சி., நிறுவனம் 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில் ஒரு திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் வடிவமைத்ததாகவும், வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறை, நிடி ஆயோக் மற்றும் எல்.ஐ.சி., அதிகாரிகளுக்கு பங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும், அதானி குழும நிறுவனங்களின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, முதற்கட்டமாக கடந்த மே மாத இறுதியில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை எல்.ஐ.சி., வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் புகார் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது:
அதானி குழுமத்தை காப்பாற்றுவதற்காக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் 30 கோடி காப்பீடுதாரர்களின் சேமிப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதால் ஏற்படும் இழப்பு ஏராளம்.
எனவே, இதுகுறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு அதிகாரிகளின் உந்துதலின் பேரில், அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி., நிறுவனம் 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி ெவளியிட்டது

