எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விரைவில் கடன் உத்தரவாத திட்டம்
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விரைவில் கடன் உத்தரவாத திட்டம்
UPDATED : அக் 25, 2025 12:10 AM
ADDED : அக் 25, 2025 12:09 AM

புதுடில்லி: அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, மத்திய அரசு அடுத்த மாதம் புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![]() |
நஷ்டத்தை சந்தித்து வரும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கவும், புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவிடும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, 100 கோடி ரூபாய் வரை கடன் பெறும் எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
![]() |
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
தயாரிப்பு துறையினருக்காக, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டத்தை போலவே, மேலும் எளிதான விதிமுறைகளுடன் எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்களுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தோல், கம்பளங்கள், இறால் மற்றும் ஜவுளி தொழில் சார்ந்த கூட்டமைப்புகள், மத்திய நிதி அமைச்சகத்துடன் பல கட்ட பேச்சுகள் நடத்திஉள்ளன.
இந்த சிக்கலில் இருந்து தங்களை மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளன. இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் புதிய கடன் உத்தரவாத திட்டத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.
* திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் வரையிலான எம்.எஸ்.எம்.இ., கடன்களுக்கு, 60 சதவீதம் வரை உத்தரவாதம்
* உற்பத்திக்கு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்க வழங்கப்படும் கடன்களுக்கு இந்த உத்தரவாதம்
* இந்த கடன் திட்டத்தில், நிறுவனங்கள் முதல் ஆண்டில் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
*அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 1.50 சதவீதமும்; அதன் பின் 1 சதவீதமும் கட்டணம் உண்டு


