ஒரு கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் நிறுவனத்துக்கு தணிக்கை தேவையில்லை கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிசீலனை
ஒரு கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் நிறுவனத்துக்கு தணிக்கை தேவையில்லை கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிசீலனை
ADDED : நவ 29, 2025 12:04 AM

புதுடில்லி குறு நிறுவனங்கள், அரசின் நடைமுறைகளை பின்பற்றும் சுமைகளை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் செய்தால் சட்டப்பூர்வ தணிக்கையில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்காக, கம்பெனிகள் சட்டத்தின் 139வது பிரிவில் திருத்தம் கொண்டு வர, மத்திய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, அத்துறையின் உயரதிகாரிகள் டில்லியில் கூறுகையில், குறு நிறுவனங்களின் தணிக்கையின்போது அரிதாகவே பிரச்னைகள் கண்டறியப்படுவதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய கம்பெ னிகள் சட்டத்தின்படி, தனிநபர் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், உறவினர்கள் அல்லது சிறு குழுக்கள் இணைந்த தனியார் கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் சட்டப்படியான தணிக்கை கட்டாயம்.
நிதி அறிக்கைகளை தயாரிப்பது, ஆண்டு பொதுக்குழுவை கூட்டுவது, நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் படிவங்களை சமர்ப்பிப்பது ஆகியவற்றை இவை செய்ய வேண்டியுள்ளது.
இந்த சூழலில் இத்தகைய நிறுவனங்களுக்கு கட்டாய தணிக்கையிலிருந்து விலக்களித்தால் அவை நிம்மதி பெருமூச்சு விடும்.
இருப்பினும், இத்திருத்தம் குறித்து நிதித்துறை நிபுணர்கள் சிலர் எதிர்மறை கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் என்ற வரம்பை வருமான வரிச்சட்டத்தின்கீழ் பயன்படுத்தி வருவோர், நிறுவன சட்ட திருத்தத்தின் வாயிலாக கூடுதல் சுதந்திரம் பெறுவர்.
இதனால், சட்டப்பூர்வ கண்காணிப்பு இல்லாமல் போகும் எனவும் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் ஏற்பட்டு, கம்பெனிகள் துறையில் ஒழுங்கு சீர்கெடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

