சமையல் எரிவாயு பயன்பாடு ஆகஸ்டில் 16 சதவீதம் சரிவு
சமையல் எரிவாயு பயன்பாடு ஆகஸ்டில் 16 சதவீதம் சரிவு
ADDED : செப் 03, 2026 06:28 AM

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சமையல் எரிவாயு பயன்பாடு 16.20 சதவீதம் சரிந்து 24.24 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. குழாய் வாயிலாக வழங்கப்படும் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு மக்களிடையேயும், தொழிற்சாலைகளிலும் அதிகரித்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, பலரும் குழாய் வழி எரிவாயுவுக்கு மாறி வருகின்றனர். இதனால், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் இதன் புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்து 4.61 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை இயல்பை விட குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு முறையே 7.90 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் அதிகரித்துள்ளது. பருவமழை குறைந்ததால், விவசாயிகள் தங்களது பாசன மோட்டார்களுக்கும், ஜெனரேட்டர்களுக்கும் அதிக அளவில் டீசலை பயன்படுத்தியதே இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
