கன்னட ஊழியர்கள் எண்ணிக்கையை கார்ப்பரேட்டுகள் தெரிவிக்க வேண்டும்
கன்னட ஊழியர்கள் எண்ணிக்கையை கார்ப்பரேட்டுகள் தெரிவிக்க வேண்டும்
ADDED : பிப் 22, 2024 01:54 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த எவ்வளவு நபர்களை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளோம் என்பது குறித்த தகவல்களை விரைவில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் இயங்கும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் கன்னடர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதத்தை காட்சிப்படுத்துவதை, அம்மாநில அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது.
இது குறித்து பேசிய கன்னட மொழி மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, வேலைவாய்ப்பு அளவீடுகளை காட்சிப்படுத்துவது பொதுமக்களின் ஆய்வுக்கு உதவும் என்றும்; உள்ளூர் விருப்பங்களை பூர்த்தி செய்ய, அதிக கன்னடர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
ஏற்கனவே விளம்பரப் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்குவதில் கன்னடத்தின் பயன்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. வழக்கறிஞர்களும் கன்னட மொழியிலேயே வழக்குகளை வாதிட அறிவுறுத்தப்படுகின்றனர்.