UPDATED : அக் 19, 2025 11:17 PM
ADDED : அக் 19, 2025 11:16 PM

திருப்பூர்:புதிய பருத்தி சீசன் துவங்கியுள்ளது; ஏற்கனவே இந்திய பருத்திக்கழகம் இருப்பு வைத்துள்ளதில், 89 லட்சம் பேல் பஞ்சு விற்பனையாகியுள்ளது.
![]() |
நம் நாட்டில் பருத்தி சாகுபடி தொடர்ந்து நடந்து வந்தாலும், மகசூல் குறைந்துவிட்டது. இதற்காக பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2023 - 24 அக்., - செப்., பருத்தி ஆண்டில் 336 லட்சம் பேல்களாக (ஒரு பேல் - 170 கிலோ) இருந்த பஞ்சு வரத்து, கடந்த பருத்தி ஆண்டான 2024 - 25ல் 312.40 லட்சம் பேல்களாக குறைந்தது.
![]() |
முந்தைய ஆண்டில், 15.20 லட்சம் பேல்களாக இருந்த பஞ்சு இறக்குமதி, கடந்த ஆண்டில், 41 லட்சம் பேல்களாக அதிகரித்தது; இது, முந்தைய ஆண்டை காட்டிலும் 170 சதவீதம் அதிகம். பஞ்சு மகசூல் குறைவு என்பதால், இறக்குமதி வரி, 11 சதவீதத்துக்கு டிச., 31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இறக்குமதி அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில்,''இந்திய பருத்திக்கழகம் கடந்த 17ம் தேதி வரை, 89 லட்சம் பேல் பஞ்சை விற்பனை செய்துள்ளது.
''கையிருப்பு பஞ்சை விற்க, பேல் ஒன்றுக்கு, 400 ரூபாய் வரை விலையை குறைத்து விற்று வருகிறது. புதிய சீசன் துவங்கி, தினமும் 80,000 பேல் பஞ்சு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.
உள்நாட்டு தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பஞ்சு ஏற்றுமதி, 37 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது
சிறு, குறு ஆலைகளின் பஞ்சு கொள்முதல் 7 சதவீதம் குறைந்துள்ளது
ஜவுளி அல்லாத துறைகளுக்கான பஞ்சு கொள்முதலும் 6 சதவீதம் குறைந்தது