டில்லியில் பட்டாசுக்கு அனுமதியால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
டில்லியில் பட்டாசுக்கு அனுமதியால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 19, 2025 11:13 PM

சிவகாசி:டில்லியில் பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதியால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என, சிவகாசி பட்டாசு தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
காற்று மாசு ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுக்கு டில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலமான என்.சி.ஆரில் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இது தொடர்பான வழக்கில், பசுமை பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 15ம் தேதி அனுமதி அளித்தது.
பசுமை பட்டாசுக்கு நாடு முழுவதும் அனுமதியால், கடந்த சில ஆண்டுகளில் சிவகாசி பட்டாசு தொழிலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மாசு கட்டுப்பாடு விதிகள், தீவிர கண்காணிப்பு ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே தற்போது பட்டாசு ஆலைகள் தயாரிக்கின்றன. இதற்கு முன், சல்பர் டையாக்ஸைடு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய மாசு வெளியாகும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டபோது பல இடங்களில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியது.
தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, பசுமை பட்டாசுகள் விநியோக தொடரிலும் தொழிலாளர்கள் எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2017ல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், லித்தியம், பாதரசம், ஆர்சனிக், துத்தநாகம், ஸ்ட்ரான்டியம் நைட்ரேட், ஆன்ட்டிமனி ஆகிய ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் தடை செய்யப்பட்டன.
பின்னர், இந்த ரசாயனங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டது.
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட, இந்தியாவின் குட்டி ஜப்பான் சிவகாசியில் இதற்கு முதலில் எதிர்ப்பு இருந்தாலும், 2019ல் இருந்தே பசுமை பட்டாசுக்கு நிறுவனங்கள் மாற துவங்கியதால், பட்டாசு தொழில் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது.
நாட்டின் 90 சதவீத பட்டாசுகளை தயாரிக்கும் சிவகாசியில், பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் நேரடி மற்றும் மறைமுகமாக பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பசுமை பட்டாசுக்கு சிவகாசி தொழிற்சாலைகள் மாறியுள்ள நிலையில், டில்லியிலும் பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதியால், 15 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன.
இந்த தீபாவளிக்கு மட்டுமின்றி, வரும் புத்தாண்டு வரையான பண்டிகை காலத்திலும் பட்டாசு விற்பனையை அதிகரிக்கும் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான நீரி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர்., ஆகியவை இணைந்து, பசுமை பட்டாசை உருவாக்கின.
முன்பு தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசைவிட பசுமை பட்டாசு 30 முதல் 40 சதவீதம் குறைவான சல்பர் டையாக்ஸைடு புகை வெளியிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.