'காற்று மாசு ஏற்படுத்திய நாடுகள் பாடம் எடுப்பதை ஏற்க முடியாது'
'காற்று மாசு ஏற்படுத்திய நாடுகள் பாடம் எடுப்பதை ஏற்க முடியாது'
ADDED : டிச 10, 2025 01:18 AM

தன்பாத் : இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தடை ஏற்படுத்த, கதை புனையும் காலனித்துவத்துக்கு எதிராக, நம் நாடு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதானி குழும தலைவர் கவுதம் அதானி வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்டின் தன்பாத் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
கட்டுக்கதை புனையும் காலனித்துவத்துக்கு மத்தியில் வாழ்கிறோம். இயற்கை வளங்களை சீரழித்த, கண்டங்களை அடிமைப்படுத்திய, புதைபடிம எரிபொருளை இரண்டு நுாற்றாண்டுகளாக சுரண்டிய நாடுகள், நமக்கு இப்போது போதனை செய்கின்றன.
காற்று மாசு ஏற்படுத்தும் கரியமில வாயு உமிழ்வை, வரலாற்றிலேயே அதிக அளவில் செய்த நாடுகள், புவிவெப்பமயமாக்கிய நாடுகள் தற்போது நம் நாட்டின் வளர்ச்சியை தாங்க இயலாமல், புதிய விதிகளை விதிக்கப் புறப்பட்டுள்ளன. பூமியை எப்படி குளிர்விப்பது என நமக்கு பாடம் எடுக்கின்றன.
இந்தியா அதன் வளர்ச்சி முன்னுரிமைகளை வடிவமைக்க, வெளிப்புற அழுத்தங்களை அனுமதிக்கக்கூடாது. உலகளாவிய கூட்டணிகள் உடைந்து, நாடுகள் முதன்மையாக சுயநலத்துக்காக செயல்படும் நேரத்தில், இந்தியா தனது சொந்த வளர்ச்சி பாதையை வரையறுக்க வேண்டும்.
வெளிப்புற அழுத்தங்களை எதிர்க்க வேண்டும். வளங்கள், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இறையாண்மை திறன்களை உருவாக்க வேண்டும்.
குஜராத்தில் காவ்டா நகரில் 520 சதுர கி.மீ. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவை அதானி குழுமம் அமைத்து வருகிறது. 2030ல் இதன் முழுத்திறனாக 30 ஜிகாவாட் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யப்படும். இது, 6 கோடி குடும்பங்களின் எரிசக்தி தேவைக்கு இணையானது.
இவ்வாறு அவர் கூறினார்.

