31 முதல் 54 மணி நேரம் வரை பணி நேரம் மாறுபடும் நாடுகள்
31 முதல் 54 மணி நேரம் வரை பணி நேரம் மாறுபடும் நாடுகள்
ADDED : ஜன 13, 2025 12:23 AM

புதுடில்லி:இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி சொன்னது 70 மணி நேரம், எல் அண்டு டி தலைவர் சுப்ரமணியன் சொன்னது 90 மணி நேரம்... இப்படி, வாரத்துக்கு நீ...ண்ட வேலை நேரம் குறித்த சர்ச்சை 90 மணி நேரத்தை தாண்டியும் நீண்டு கொண்டிருக்கிறது. சமூக வலைதள வசவுகள் ஒருபுறம் இருக்கட்டும், சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ., என்ன சொல்கிறது, எந்தெந்த நாடுகளில் வேலை நேரம் எவ்வளவு எனப் பார்க்கலாம்.
வாரத்துக்கு இந்திய தொழிலாளர்கள் செலவிடும் சராசரி வேலை நேரம் 46 மணி 7 நிமிடங்கள் என்கிறது ஐ.எல்.ஓ., உலக அளவில் அதிக வேலை நேரம் இது என்பது அதன் கணிப்பு.
அதிலும், வாரத்துக்கு 46 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுவோரில், பூடானுக்கு அடுத்ததாக, இந்தியர்களின் எண்ணிக்கை 51 சதவீதம். பூடானில் 61 சதவீதம் பேர் 49 மணி நேரம் பணியாற்றுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் 51 மணி நேரம் வரை பணியாற்று வோரும் உண்டு.
இதற்கு மாறாக, சீனா, ஜெர்மனி நாடுகளில் முறையே, வாரத்துக்கு 34.2 மணி நேரம் முதல் 46.1 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். அங்கெல்லாம் நமது 46 மணி நேரத்தை தொடுவோர் எண்ணிக்கையும், சூழலும் அரிது. இன்னும் குறைவான வேலை நேரம் கொண்ட நாடுகளாக நெதர்லாந்து (31.6), நார்வே (33.7) இருக்கின்றன. இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால், அது தனி ஆராய்ச்சிக்கு வித்திடும்.