யமஹா - ஹோண்டா 'டிரேட் மார்க்' புது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு
யமஹா - ஹோண்டா 'டிரேட் மார்க்' புது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 16, 2025 10:57 PM

மும்பை :யமஹா நிறுவனத்தின் வர்த்தக முத்திரை தொடர்பான விவகாரத்தில், வர்த்தக பதிவாளரின் உத்தரவை, மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்து புதிதாக முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார் நிறுவனத்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை போன்ற ஒரு முத்திரையை யமஹா நிறுவனம் கோரிய நிலையில், இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால், வர்த்தக பதிவாளர் இதை வழங்க மறுத்தார்.
இதை எதிர்த்து யமஹா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, யமஹாவின் டபுள்யு.ஆர்., மற்றும் ஹோண்டாவின் டபுள்யு.ஆர்., - வி ஆகிய இரு வர்த்தக முத்திரைகளும் மேலோட்டமாக பார்த்தால் குழப்பம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டது.
இருப்பினும், யமஹாவின் விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன், அதன் வர்த்தக முத்திரை கோரிக்கைக்கு, பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளைக் கோரி ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தது.
யமஹா கடந்த 1990ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் டபுள்யு.ஆர்., வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி வருவதால், இதை ஒரு சிறப்பு சூழ்நிலையாக கருதி இருக்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதைத்தொடர்ந்து டபுள்யு.ஆர்., வர்த்தக முத்திரைக்கான யமஹாவின் விண்ணப்பத்தை நிராகரித்த பதிவாளரின் உத்தரவை ரத்து செய்தது. வர்த்தக முத்திரை சட்டத்தின் விதிகளின்படி, விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் விளம்பரப்படுத்துமாறும், பின்னர் சட்டப்படி செயல்படுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.