கிரெடிட் கார்டில் செலவழிப்பது திருச்சி, திருப்பூரில் அதிகரிப்பு
கிரெடிட் கார்டில் செலவழிப்பது திருச்சி, திருப்பூரில் அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2025 12:00 AM

புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட நாட்டின் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில், 175 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக, 'விசா' நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டில் செலவு செய்வது குறித்து விசா நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மின்னணு பண செலவழிப்பு முறைகள் பெரும் வரவேற்பை பெற்று, மக்கள் செலவு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் கிரெடிட் கார்டில் செலவழிப்பது பெருமளவு அதிகரித்துள்ளது.
திருச்சி, திருப்பூர், ஜெய்ப்பூர், அசன்சோல், ஜுனாகத் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் 2019 முதல் 2024ம் ஆண்டு வரை, கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு 175 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இதே ஐந்து ஆண்டுகளில் மெட்ரோ நகரங்களில் செலவிடல் வளர்ச்சி 1.4 மடங்காக இருந்த நிலையில், இரண்டாம் நிலை நகரங்களில் அதைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த இரண்டாம் நிலை நகரங்களில் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், ஒரு கார்டில் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர். குறிப்பாக, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக தொகை செலவிடப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.
மெட்ரோ அல்லாத நகரங்களில் மக்களின் வாங்கும் சக்தியும்; செலவிடக்கூடிய கையிருப்பு தொகையும் அதிகரித்திருப்பது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது. அதோடு, மெட்ரோ நகரங்களுக்கு இணையான மின்னணு பரிவர்த்தனை இணைப்பு வசதிகள், குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் கிடைத்திருப்பதும் இதற்கு காரணமாகியுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய நகரங்களில் உள்ளவர்கள், ஒரு கார்டில் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர்