முன்கூட்டியே துவங்கும் பருத்தி சீசன் நுாற்பாலை துறையினர் மகிழ்ச்சி
முன்கூட்டியே துவங்கும் பருத்தி சீசன் நுாற்பாலை துறையினர் மகிழ்ச்சி
ADDED : ஆக 17, 2025 12:44 AM

திருப்பூர்;அறுவடை துவங்கி விட்டதால், புதிய பருத்தி சீசன் முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளதாக, தமிழக நுாற்பாலைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
நம் நாட்டில், பருத்தி ஆண்டு செப்., மாதத்துடன் நிறைவு பெறுகிறது; வரும் அக்., முதல் புதிய பருத்தி ஆண்டு துவங்க உள்ளது. நடப்பாண்டில், கடந்த 14ம் தேதி நிலவரப்படி, 300.95 லட்சம் பேல் பஞ்சு விற்பனையாகியுள்ளது. ஒரு பேல் என்பது 170 கிலோ.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வருவதை அடுத்து, குளிர்கால ஆர்டர் மீதான ஆடை உற்பத்தியை துவக்கியாக வேண்டும். உள்நாட்டு தேவைக்காக, அமெரிக்காவில் இருந்து பஞ்சு இறக்குமதி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த பருத்தி சீசன் முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய பருத்தி சங்கம் அறிவித்திருப்பது, தொழில்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
அடுத்த பருத்தி சீசன், முன்கூட்டியே துவங்கவுள்ளது. சில வாரங்களை தாண்டினால் போதும், முதல் தர பஞ்சு கொள்முதல் செய்யலாம் என, நுாற்பாலையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அவசரகால ஆர்டர்களுக்காக, நீண்ட இழைகளை கொண்ட அமெரிக்காவின், 'பீமா' பஞ்சு இறக்குமதி செய்கின்றனர்.
வழக்கமாக, பருத்தி ஆண்டு துவங்கியதும், அக்., மாதம் 3வது வாரத்தில் இருந்து பஞ்சு வரத்து துவங்கும்; இந்தாண்டில், செப்., 2வது வாரத்தில் இருந்தே பஞ்சு வரத்து துவங்கும் என்ற தகவல் நிம்மதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி தரும் செய்திகள் பருத்தி சீசன் முன்கூட்டியே துவங்குகிறது அமெரிக்க பருத்தி இறக்குமதி அதிகரிப்பு.