ADDED : டிச 10, 2024 11:10 PM

புதுடில்லி:சோலார் செல்கள் எனப்படும் சூரிய மின்கலன்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த, வருகிற 2026ம் ஆண்டு முதல், உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதை, மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு, 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உற்பத்தி திறனை, தற்போதுள்ள 156 ஜிகாவாட்டில் இருந்து, 500 ஜிகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு, சீனாவில் இருந்து சூரிய மின் உற்பத்திக்கான மின்கலன்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தி, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் துாய்மை எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள், வருகிற 2026ம் ஆண்டு முதல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் வாயிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்கலன்களால் உருவாக்கப்பட்ட, 'சோலார் பேனல்' தொகுப்புகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக நிறுவப்படும் சூரிய மின்கலன்களின் திறன், அடுத்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசு அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

