சிறுதானியம், முருங்கை ஏற்றுமதி விவசாயிகளை இணைக்க முடிவு
சிறுதானியம், முருங்கை ஏற்றுமதி விவசாயிகளை இணைக்க முடிவு
UPDATED : ஆக 17, 2025 10:29 PM
ADDED : ஆக 17, 2025 10:25 PM

சென்னை:-தமிழகத்தில் சிறுதானியங்கள் மற்றும் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, 2,000 சிறு, குறு விவசாயிகளை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
![]() |
கரூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் முதலீட்டில் முருங்கை பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவ பொதுவசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானிய வகைகளும், கரூர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முருங்கை விளைச்சலும் அதிகம் உள்ளது. நம் நாட்டில் முருங்கை கீரை, முருங்கைக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் முருங்கை பூ, முருங்கை இலை பொடி, எண்ணெய், விதையில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உலகம் முழுதும் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
எனவே, அனைத்து வகை சிறுதானியங்கள் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு, தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் பணியில், தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, முருங்கை, சிறுதானியங்களை சாகுபடி செய்யும், 2,000 சிறு, குறு விவசாயிகளை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் இணைக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் வாயிலாக, இந்தாண்டு 35 கோடி ரூபாய்க்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய இலக்கு திண்டுக்கல், கரூர், தேனி, திருப்பூர், அரியலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி, கடலுார், மதுரை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்க உதவ, 30 கோடி ரூபாயில் பொது வசதி மையங்களை அமைக்க அரசு திட்டம்.