சீன கண்ணாடி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை
சீன கண்ணாடி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை
ADDED : அக் 17, 2024 11:52 PM

ஜெய்ப்பூர்,:சூரிய மின் தகடுகள் தயாரிக்க உதவும் கண்ணாடியை இந்தியாவுக்குள் சீனா குவிப்பதை தடுக்காவிட்டால், உள்நாட்டில் இந்த தொழில் அழிந்து விடும் என, 'போரோசில் ரினீவபிள்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூரிய மின் தகடுக்கான கண்ணாடியை அதிகளவில் இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்து குவிப்பதை தடுக்க, அதன் இறக்குமதி மீது பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்குமாறு அரசை, போரோசில் நிறுவனம் வலியுறுத்திஉள்ளது.
சீனத் தயாரிப்புகளின் அதிக இறக்குமதியால், இந்த தொழிலில் சமவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும்; உள்நாட்டில் தயாரிப்பு விலையைவிட குறைவாக சீன தயாரிப்புகள் இறக்குமதியாவதாகவும் போரோசில் தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால், சூரிய மின் தகடுக்கான கண்ணாடி தயாரிக்கும் உள்நாட்டு தொழில் அழியும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீனா விற்கும் சூரிய மின் தகடு தயாரிப்புக்கான கண்ணாடியின் விலை, உள்நாட்டில் மூலப்பொருட்கள், மின்சாரம், எரிபொருளுக்கு ஆகும் செலவை விட குறைவாக இருப்பதாக, போரோசில் துணைத் தலைவர் ஸ்ரீவர் கெருகா தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் நாம் கவனம் செலுத்தி வரும் நிலையில், உள்நாட்டு கண்ணாடி தொழில் பாதிக்கப்படும் நிலையை தடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.