ஆன்லைனில் வாங்கும் பொருளுக்கு ஆடம்பர வரி விதிக்க கோரிக்கை
ஆன்லைனில் வாங்கும் பொருளுக்கு ஆடம்பர வரி விதிக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 01:04 AM

புதுடில்லி:ஆன்லைன் வாயிலாக வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விதியின் கீழ், ஆடம்பர வரி விதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, அனைத்து இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பல்வேறு சில்லரை வியாபாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்ததாவது:
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள், விலையை குறைத்து, சட்ட விதிகளை பின்பற்றாமல், சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளின் லாபத்தை பறித்து வருகின்றன.
இதனால், பராம்பரிய முறையில் விற்பனை செய்யும், சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பத்தாண்டுக்கும் மேலாக இந்தியாவின் சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, ஆதாயத்தை ஈட்டி வருகின்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அன்னிய நேரடி முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
சில்லரை பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், கட்டமைப்புகளை உருவாக்காமல், அன்னிய நேரடி முதலீடு, நஷ்டத்தை ஏற்படுத்தவும், சிறு கடைகளை அழிக்கவும், வினியோக தொடரை கட்டுப்பாட்டில் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சில்லரை வர்த்தகத்தில், டிஜிட்டல் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, வரும் மே 1ம் தேதி நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

