சலவை, அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்
சலவை, அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2025 10:44 PM

புதுடில்லி :வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சலவை பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துஉள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, நுகர்வோர் செலவிடுவதை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்க முடிவு செய்யப்பட்டது.
சீர்திருத்தம் நான்கு அடுக்குகளை, 5, 18 என இரு அடுக்குகளாக குறைத்து மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஹேர் ஆயில், குளியல் சோப், பவுடர், ஷாம்பூ, டூத்பிரஷ், பற்பசை ஆகியற்றுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளில், துாய்மைப் பொருட்களில் அத்தியாவசியமான துணி சோப், சலவை பவுடர் மற்றும் திரவங்கள், தரை துடைக்கும் திரவங்கள், அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்காதது குறித்து அத்துறையினர் கவலை தெரிவித்துஉள்ளனர்.
விடுபட்டுள்ளது இதுகுறித்து, 'டெலாய்ட் இந்தியா' நிறுவனத்தின் பார்ட்னர் ஹர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொருவர் வீட்டிலும் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான சலவைப்பொருளுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு தவறுதலாக விடுபட்டுஉள்ளது.
துாய்மைக்கு அடிப்படை தேவையாக இருக்கும் பொருளுக்கு அதிக வரி என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருக்கும். இதற்கு வரியை குறைப்பது, குறைந்த மற்றும் நடுத்தர வருமான பிரிவினரின் மாதாந்திர செலவில் மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துணி சோப், சலவை பவுடர் மற்றும் திரவங்கள், தரை துடைக்கும் திரவங்கள், அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்காதது குறித்து கவலை