ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீட்டை ஈர்ப்பதில் சிக்கல்
ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீட்டை ஈர்ப்பதில் சிக்கல்
ADDED : மே 17, 2025 12:36 AM

சென்னை:தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனத்தில் வான்வெளி மற்றும் ராணுவ தொழிலில், முதலீட்டை ஈர்க்கும் பணியை மேற்கொண்டு வந்த திட்ட பிரிவு முடங்கியிருப்பதால், ராணுவ தொழில் பெரு வழித்தடத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை, 2022ல் வெளியிட்டது.
இதன் வாயிலாக, அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஒரு லட்சம் நபருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வான்வெளி மற்றும் ராணுவ தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, இந்த துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வைப்பது உள்ளிட்ட பணியை, டிட்கோவில் திட்ட இயக்குநரின் கீழ் செயல்பட்ட பிரிவு மேற்கொண்டது.
இந்த பிரிவு இயக்குநராக, ராணுவ துறையில் பணியாற்றிய தமிழக அதிகாரி அயல்பணியில் இருந்தார்.
அவரை சமீபத்தில், மத்திய அரசு தன் பணிக்கு அழைத்துக் கொண்டது. இதனால், திட்ட பிரிவு பணிகள் முடங்கியுள்ளதால், ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக ராணுவ தொழில் வழித்தடம்
சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் ஆகிய ஐந்து நகரங்களை உள்ளடக்கிய வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது
இந்த வழித்தடத்தில் தொழில் பூங்கா, சாதனங்களை பரிசோதிக்கும் பொது வசதி மையங்கள் அமைக்கப்படுகின்றன
ராணுவ தொழில் வழித்தடத்தை செயல்படுத்தும் முகமையாக, டிட்கோ உள்ளது,