பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்
பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்
ADDED : டிச 19, 2024 11:48 PM

சென்னை:''சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை முதல் முறையாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கும் போது சிரமம் இருக்கும்.
''அதை அனுபவமாக கருதி தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் மூன்று - நான்கு ஆண்டுகளில் அதிக பலன் கிடைக்கும்,'' என, கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரிஷ் பாண்டியன் தெரிவித்தார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில், சென்னை கிண்டியில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், 'ரயில்வே, இஸ்ரோ, இந்தியன் ஆயில், மெட்ரோ ரயில்வே' உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், 250க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கிரிஷ் பாண்டியன் மேலும் கூறியதாவது:
ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு பொருட்களை சப்ளை செய்வதன் வாயிலாக, பல நிறுவனங்களின் ஆர்டர் கிடைக்கும்.
உதாரணமாக, ராணுவ துறையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனத்துக்கு சிறந்த முறையில் பொருட்களை விற்பதன் வாயிலாக, அந்த துறையில் உள்ள 28 நிறுவனங்களுக்கு பொருட்களை விற்கும் வாய்ப்பு கிடைக்கும். 5 - 10 ஆண்டுகளில், சிறு நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.