கொய்யா, மாம்பழ ஏற்றுமதி ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு திண்டுக்கல், தர்மபுரி விவசாயிகள் வரவேற்பு
கொய்யா, மாம்பழ ஏற்றுமதி ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு திண்டுக்கல், தர்மபுரி விவசாயிகள் வரவேற்பு
ADDED : மே 31, 2025 10:47 PM

சென்னை :தமிழகத்தில் இருந்து கொய்யா, மாம்பழம் மற்றும் அவற்றில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, திண்டுக்கல், தர்மபுரி விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண் தொடர்பாக பயிற்சி அளித்து, தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களுடன், அரசு தொடர்பை ஏற்படுத்த உள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் தரமான பொருட்களை பயன்படுத்தி, அவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், டி.என்.எபெக்ஸ் எனப்படும், தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் உதவுகிறது.
இந்நிறுவனம் தற்போது, கொய்யா, மாம்பழம் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க விவசாயிகள், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க உள்ளது.
இதற்காக, கொய்யா அதிகம் விளையும் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆயக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள், மற்றும் தர்மபுரியில் மாம்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகளையும் அதிகாரிகள் சந்தித்து, பயிற்சி அளிக்க உள்ளனர். இதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து, சிறுதொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனவே, திண்டுக்கல், தர்மபுரி விவசாயிகளுக்கு, தரமான கொய்யா, மாம்பழத்தை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்வது, அதிக மகசூல் கிடைக்க என்ன செய்வது உள்ளிட்டவை தொடர்பாக, அடுத்த மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பின், இரு பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இடையே தொடர்பு ஏற்படுத்தப்படும். இதனால், தொழில் நிறுவனங்கள் தரமான பொருட்கள் கிடைக்கும். விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் ஆண்டு முழுதும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.