நேரடி வரி வசூல் 16.45 சதவீதம் அதிகரிப்பு :தங்க நகை ஏற்றுமதி நவம்பரில் 13சதவீதம் வீழ்ச்சி
நேரடி வரி வசூல் 16.45 சதவீதம் அதிகரிப்பு :தங்க நகை ஏற்றுமதி நவம்பரில் 13சதவீதம் வீழ்ச்சி
ADDED : டிச 18, 2024 09:58 PM

நேரடி வரி வசூல் 16.45 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 17ம் தேதி வரை, நாட்டின் நேரடி வரி வசூல் 15.82 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக, மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 16.45 சதவீதம் அதிகம்.
இதில் நிறுவன வரி மற்றும் நிறுவனமல்லாத நேரடி வரி வசூல் இரண்டும் கிட்டத்தப்பட்ட பாதியளவில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் 17 வரை, முன்கூட்டி செலுத்தும் வரி வசூல் 21 சதவீதம் அதிகரித்து, 7.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை வரியாக 40,114 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 3.39 லட்சம் கோடி ரூபாயை, வருமான வரித் துறை உரியவர்களுக்கு திருப்பி அளித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்க நகை ஏற்றுமதி நவம்பரில் 13சதவீதம் வீழ்ச்சி
புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், நவரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி 12.94 சதவீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக, ஆபரணக்கற்கள், நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
2023 நவம்பரில் 19,163 கோடி ரூபாய்க்கு இவற்றின் ஏற்றுமதி நடைபெற்றதாகவும்; அது, இந்த ஆண்டு நவம்பரில், 16,763 கோடி ரூபாயாக குறைந்து விட்டதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 42 சதவீதம் வீழ்ச்சி கண்டது. புவிசார் அரசியல் மற்றும் பல்வேறு நாடுகளில் நிலவும் மந்தநிலை ஆகியவை, ஆபரணக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி குறையக் காரணமானதாகவும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.