விமான டிக்கெட் ரத்து விவகாரம் பயணியர் நலன் காக்க பரிந்துரைகள் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பரிந்துரை
விமான டிக்கெட் ரத்து விவகாரம் பயணியர் நலன் காக்க பரிந்துரைகள் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பரிந்துரை
ADDED : நவ 05, 2025 12:40 AM

புதுடில்லி:விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்தாலோ, மாற்றம் செய்தாலோ கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்க கூடாது என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகமான டி.ஜி.சி.ஏ., புதிய விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விமான பயணியருக்கு ஆதரவான சில மாற்றங்களை டி.ஜி.சி.ஏ., பரிந்துரைத்துள்ளது. அவை வருமாறு:
உள்நாட்டு பயணத்துக்கு விமானம் புறப்படுவதற்கு குறைந்தது ஐந்து நாட்களும் வெளிநாடு பயணத்துக்கு 15 நாட்களும் உள்ளபோது முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ, மாற்றம் செய்தாலோ கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
பயண முகவர் வாயிலாக விமான டிக்கெட் வாங்கப்பட்டிருந்தாலும், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான தொகை, 21 வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும்.
நேரிலோ, ஆன்லைனிலோ டிக்கெட் முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள், பெயர் உள்ளிட்ட ஏதாவது பிழை கண்டறியப்பட்டு, பயணியால் சுட்டிக்காட்டப்பட்டால், கூடுதல் கட்டணமின்றி திருத்தம் செய்யப்பட வேண்டும்.
உரிய சான்றுடன் மருத்துவ காரணத்தால் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு விமான நிறுவனங்கள் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது பயணியின் எதிர்கால விமான பயணத்துக்கான தொகை இருப்பாக வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் கொண்ட வரைவு அறிக்கை மீது வரும் 30ம் தேதி வரை பயணியர் கருத்து தெரிவிக்கலாம் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது. அவற்றை பரிசீலித்த பிறகு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகள் ரத்து தொடர்பாக விமான நிறுவனங்கள் மீது பயணிகளின் புகார் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விதிகளை டி.ஜி.சி.ஏ., பரிந்துரைத்துள்ளது .

