ADDED : ஜூன் 22, 2025 12:53 AM

குன்னுார்:இஸ்ரேல் -- ஈரான் போர் காரணமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், 6.41 லட்சம் கிலோ தேயிலை துாள் தேக்கமானது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையம், டீசர்வ் மையங்களில், 25வது ஏலம் நடந்தது. இதில், குன்னுார் மையத்தில் வரத்து அதிகரித்து, 24.86 லட்சம் கிலோ தேயிலை வந்த நிலையில், 74.21 சதவீதம் விற்றது. 6.41 லட்சம் கிலோ தேக்கமானது.
கடந்த வாரத்தில் 4.17 லட்சம் கிலோ தேக்கமானது. சராசரி விலை கிலோவிற்கு 98.86 ரூபாய் என இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில், 128 ரூபாய் என இருந்த சராசரி விலை, 30 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
டீசர்வ் ஏலத்தில், 1.87 லட்சம் கிலோ வந்ததில், 72.23 சதவீதம் விற்பனை ஆனது. 5 மாதங்களாக 100 ரூபாய்க்கு மேல் இருந்த விலை, தொடர்ந்து குறைந்து வருவதால், விவசாயிகளுக்கான பசுந்தேயிலை விலையும் குறையும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து தேயிலை வர்த்தகர்கள் கூறுகையில், ''மழை காரணமாக மகசூல் அதிகரித்து, தேயிலை துாள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இஸ்ரேல் -- ஈரான் போர் காரணமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், ஏற்றுமதிக்கான வர்த்தகர்கள் தேயிலை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
''தொகை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்யவும், அதிக தேக்கம் ஏற்படாமல் இருக்கவும் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்றனர்.