பொதுத்துறை நிறுவன இயக்குநராக அரசியல்வாதியை நியமிக்க எதிர்ப்பு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இடையே டிஷ்யூம்
பொதுத்துறை நிறுவன இயக்குநராக அரசியல்வாதியை நியமிக்க எதிர்ப்பு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இடையே டிஷ்யூம்
ADDED : நவ 08, 2025 03:27 AM

மும்பை: பொதுத்துறை நிறுவனங்களில் அரசியல் பின்புலம் உள்ளோர் இயக்குநர்களாக நியமிக்கப்படுவதற்கு, குறைந்தது ஐந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுபோன்ற நியமனங்களை ஆக்ஸிஸ், யு.டி.ஐ., டி.எஸ்.பி., சுந்தரம், யூனியன் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அண்மையில் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபித்துள்ளன.
“அரசியல் தொடர்பு உள்ளவர்களை பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குநர்களாக நியமித்தால், அவர்கள் நிறுவனங்களின் முடிவுகளை அரசியலாக்குவார்கள். மேலும் நிறுவனங்களின் இலக்குகளும் திசை மாறும்,” என்று அதில் தெரிவித்துள்ளன.
மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அரசியல் பின்புலமுள்ள இயக்குநர்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை என்ற கவலையை மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் வெளிப்படுத்தி உள்ளன.
ஆனால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், கோட்டக் மஹிந்த்ரா, எச்.டி.எப்.சி., நிப்பான் இந்தியா போன்ற மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், அத்தகைய நியமனங்களை ஆதரித்துள்ளன.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.டி.பி.சி., பாரத் பெட்ரோலியம், ரயில் டெல், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மாங்களூர் ரீபைனரி & பெட்ரோ கெமிக்கல்ஸ் முதலிய பொதுத்துறை நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட அரசியல் பின்புலம் உள்ள இயக்குநர்களின் நியமனங்களை எதிர்த்து வாக்களிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன், தனது நிறுவனத்தில் தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குநராக கோபால் கிருஷன் அகர்வாலை மறுநியமனம் செய்ய பாரத் பெட்ரோலியம், தன் பங்குதார்களிடம் அனுமதி கோரியது.
ஆனால், அவர் பா.ஜ., கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருப்பதால், அந்த நியமனத்தை யூனியன் மியூச்சுவல் பண்டு எதிர்த்து ஓட்டளித்தது.
அதேபோல, பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் ஆசிஷ் சதுர்வேதியை இயக்குநராக நியமிக்க முயன்றபோது, 'அவர் பா.ஜ., செய்தித்தொடர்பாளர். பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
அவரது நியமனம், நிறுவன முடிவுகளை அரசியலாக்க ஒரு காரணமாக அமைந்துவிடும்' என்று சொல்லி, சுந்தரம் மியூச்சுவல் பண்டு எதிர்த்து ஓட்டளித்தது.
எதிர்க்கும் நிறுவனங்கள் ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்டு யு.டி.ஐ., மியூச்சுவல் பண்டு டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு சுந்தரம் மியூச்சுவல் பண்டு யுனியன் மியூச்சுவல் பண்டு ஆதரிக்கும் பெரிய நிறுவனங்கள் எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் கோட்டக் மஹிந்திரா நிப்பான் இந்தியா மியூச்சவல் பண்டு
மொத்தம் 11 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து நிர்வாகம் செய்து வரும் ஐந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், அரசியல் சார்ந்தவர்களை பொதுத்துறை நிறுவன இயக்குநராக நியமிக்க எதிர்ப்பு

