தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு பைப்லைன் வாயிலாக வினியோகம்
தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு பைப்லைன் வாயிலாக வினியோகம்
ADDED : ஜன 18, 2024 11:45 PM

சென்னை: முதல் முறையாக, சென்னையில் இரு தொழிற்சாலைகளுக்கு, 'பைப் லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகத்தை, 'டோரன்ட் காஸ்' நிறுவனம் துவக்கியுள்ளது.
வரும் மே முதல், திருவள்ளூர் மாவட்டத்தில், 'சிப்காட்' நிறுவனத்தின் கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, வீடு, தொழிற்சாலை, வாகனங்களுக்கு எரிபொருளாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது.
'பைப்டு நேச்சுரல் காஸ்'
இந்த எரிவாயு, காற்றை விட எடை குறைவானது. கசிவு ஏற்பட்ட உடனே காற்றில் கலந்து விடும். இதனால், எளிதில் தீப்பற்றாது.
இந்தியன் ஆயில் நிறுவனம், சென்னை அடுத்த எண்ணுாரில், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. முனையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில், திரவ நிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாக மாற்றியும், வீடுகளுக்கு பி.என்.ஜி., எனப்படும், 'பைப்டு நேச்சுரல் காஸ்' ஆகவும் வினியோகம் செய்யப்படும்.
எண்ணுாரில் இருந்து தமிழகம் முழுதும் இயற்கை எரிவாயு வினியோகிக்க, துாத்துக்குடி வரை குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும், வீடு, வாகனம், தொழிற்சாலைகளுக்கு எரிவாயு வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ள ஏழு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு வினியோகம் செய்யும் பணிக்கான அனுமதி, டோரன்ட் காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், சென்னையில், அரும்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகத்தையும்; வாகனங்களுக்கு, பெட்ரோல் பங்குகளில் உள்ள சி.என்.ஜி., முனையங்கள் வாயிலாகவும் எரிவாயு வினியோகத்தை ஏற்கனவே துவக்கியுள்ளது.
தொழிற்சாலைகளில், 'பர்னஸ் ஆயில், டீசல், அதிவேக டீசல்' போன்றவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதில், இயற்கை எரிவாயு பயன்படுத்தினால், 30 சதவீதம் செலவு குறையும்.
தொழில் பூங்காக்கள்
தற்போது டோரன்ட், சென்னை பாடியில் உள்ள 'பிரேக்ஸ் இந்தியா' நிறுவனத்திற்கும், அம்பத்துாரில் உள்ள 'ஸ்ரீ மித்தாய்' நிறுவனத்திற்கும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகத்தை துவக்கியுள்ளது.
சிப்காட் நிறுவனத்திற்கு, கும்மிடிப்பூண்டியில், 1,500 ஏக்கரிலும்; தேர்வாய்கண்டிகையில், 1,100 ஏக்கரிலும் தொழில் பூங்காக்கள் உள்ளன. அங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
அந்த ஆலைகளுக்கும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, தொழில் நிறுவனங்களுடன், டோரண்ட் பேச்சு நடத்தி வருகிறது. இதற்காக குழாய் வழித்தடம் அமைக்கும் பணி நடக்கிறது. வரும் மே மாதல் முதல் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.

