நலத்திட்டங்கள் பொருளாதாரத்தை பாதிக்கிறதா? தலைமை பொருளாதார ஆலோசகர் விளக்கம்
நலத்திட்டங்கள் பொருளாதாரத்தை பாதிக்கிறதா? தலைமை பொருளாதார ஆலோசகர் விளக்கம்
ADDED : அக் 05, 2025 10:19 PM

மதுரை:'நலத்திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறதா' என்பதற்கு, தேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் மதுரையில் பதிலளித்துள்ளார்.
நம் நிருபரிடம் அவர் கூறியதாவது:
சேவைத்துறையை விட உற்பத்தி துறைக்குத் தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தன்மை அதிகம். இதுவே பிற துறைகளையும் முன்னேற்றுகிறது. வெறும் விலைவாசி அதிகரிப்பின் மூலம், நாட்டின் பொருளாதார பற்றாக்குறையை போக்க இயலாது.
ஏழை, நடுத்தர குடும்பங்களுக்காக நலத்திட்டங்களை அரசு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என சொல்ல முடியாது. நலத்திட்டங்களுக்கான கால வரையறை, செலவிடும் தொகை, தகுதியானவர் யார் போன்றவற்றுக்கான விடை கிடைக்கும் போது, யாரும் நலத்திட்டங்கள் மோசமானவை என கூற மாட்டர்.
இந்தியாவில் பசுமை மாற்றம் வெற்றியடைய பெரிய அளவு முதலீடுகள் அவசியம். இதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் துாய்மையான ஆற்றல், தொழில்நுட்ப மேம்பாடு தேவைப்படுகிறது. ஏ.ஐ.,யை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
கல்வி, மின்னணு, தகவல் தொழில்நுட்பவியல் போன்ற அமைச்சகங்களில் இதற்கான சிறப்பு மையங்கள், பாடத்திட்டத்தை சீரமைத்தல் போன்ற வேலைகள் நடந்து வருகின்றன. ஏ.ஐ., தொழில்நுட்பம் பாதிக்கும் துறைகளை சிறப்பு கவனத்தில் கொண்டு வருவதுடன், உள்நாட்டு ஏ.ஐ., ஆப்கள் உருவாக்கும் பணிகளும் நடக்கின்றன.
ஏ.ஐ., மூலம் சில துறைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருந்தாலும், உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன. அந்த தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால், உண்மையான தாக்கம் பின்னரே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.