ADDED : ஜூன் 29, 2025 07:26 PM

நகைக்கடன் பெறுவது கிரெடிட் ஸ்கோர் மீது என்ன வகை தாக்கம் செலுத்தும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
நகைக்கடன் என்பது எளிதாக பெறக்கூடிய கடனாக இருக்கிறது. அவசர தேவை எனில் குறைந்தபட்ச ஆவணங்களோடு நகைக்கடன் பெறலாம். அண்மையில், நகைக்கடன் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் விவாதத்தை ஏற்படுத்தினாலும், நடுத்தர மக்களுக்கு ஏற்ற கடன் வசதியாக தொடர்கிறது.
தங்க நகைக்கடன் பெறும் போது பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும் என்றாலும், கிரெடிட் ஸ்கோர் அவற்றில் ஒன்றாக இருப்பதில்லை. எனினும், நகைக்கடன் பெறுவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா என்பது முக்கிய கேள்வியாக அமைகிறது.
கடன் தகுதி
பொதுவாக வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கிரெடிட் ஸ்கோர் எனும் கடன் தகுதி எண்ணிக்கை முக்கிய அம்சமாக அமைகிறது. ஒருவர் கடனை திரும்பி செலுத்தும் ஆற்றலை உணர்த்தக்கூடிய இந்த எண்ணிக்கையை வங்கிகள், நிதி நிறுவனங்கள் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதுகின்றன.
பொதுவாக கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் கடன் பெறுவதும் எளிது என்பதோடு, வட்டி விகிதம் உள்ளிட்டவற்றிலும் சாதகமான நிலையை பெறலாம். அதே நேரத்தில் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் பெறுவது சிக்கலாகலாம்.
எனவே தான், கிரெடிட் ஸ்கோரை நல்ல முறையில் பராமரிப்பது அவசியம். இதற்காக கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் விஷயங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
நகைக்கடனை பொறுத்தவரை ஈட்டுறுதி உள்ள கடன் என்பதால், வங்கிகள் இந்த கடன் வழங்க கிரெடிட் ஸ்கோரை முக்கியமாக கருதுவதில்லை. தங்கத்தை அடமானம் வைத்தே கடன் பெறுவதால் அதன் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படுகிறது.
கடன் அறிக்கை
நகைக்கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை என்றால், இந்த கடனை பராமரிக்கும் விதம் கிரெடிட் ஸ்கோர் மீது தாக்கம் செலுத்தும்.
ஈட்டுறுதி கொண்ட கடன் என்ற போதிலும், ஒருவர் தங்க நகைக்கடன் பெறும்போது அது தொடர்பான தகவல் கிரெடிட் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. கடனுக்கான தவணை செலுத்தப்படும் விதம், அதில் ஏற்படும் தாமதம், கடனை அடைப்பது உள்ளிட்ட விஷயங்கள் கிரெடிட் சேவை நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படும். இவை கிரெடிட் அறிக்கையில் பிரதிபலிக்கும்.
இந்த அம்சங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிப்பது அல்லது குறைவதில் தாக்கம் செலுத்தும்.
கடன் தொகையை உரிய முறையில் செலுத்தும்பட்சத்தில், அது நல்லவிதமாக தாக்கம் செலுத்தும். முறையாக பணம் செலுத்துவது, வாங்கிய கடனை பொறுப்பாக செலுத்துவதாக கருதப்படும்.
குறிப்பாக முதல்முறை நகைக்கடன் பெறுபவர்களை பொறுத்தவரை, கடன் வரலாற்றை உருவாக்கி கொண்டு அதை நல்ல முறையில் வளர்த்தெடுக்கவும், கடன் பெறுபவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தவும் உதவும்.
அதே நேரத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் ஏற்படும் தாமதம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
எனவே தங்க நகைக்கடன் பெறும்போது அதை முறையாக திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வாங்கிய கடனை அடைக்க உதவுவதோடு, கிரெடிட் ஸ்கோர் பராமரிப்பிலும் இது கைகொடுக்கும்.