உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்பு: டாடா நாளை துவக்கம்
உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்பு: டாடா நாளை துவக்கம்
ADDED : அக் 26, 2024 09:28 PM

புதுடில்லி:பெரிய ராணுவ விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணி, குஜராத்தின் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில், நாளை முதல் துவங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து, இந்த ஆலையை துவக்கி வைக்க உள்ளனர்.
இந்திய விமானப்படை கடந்த 1960களில் இருந்து, 'அவ்ரோ ஹாக்கர் சிட்டிலே எச்.எஸ்., 748' ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிலையில், இவற்றுக்கு மாற்றாக, ஸ்பெயினின் 'ஏர்பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 'சி - 295' ரக விமானங்களை வாங்க, 2021ம் ஆண்டு, 'ஏர்பஸ் டிபன்ஸ் அண்டு ஸ்பேஸ்' நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் ஆலைகளில் இருந்து 16 விமானங்கள் இந்தியாவுக்கு தயாரித்து அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள 40 விமானங்களை இந்தியாவிலேயே 'டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து ஏர்பஸ் தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதோதராவில் 2022ம் ஆண்டு அக்டோபரில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின், நாளை முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது.