ADDED : டிச 14, 2024 10:48 PM

நொய்டா:நொய்டாவில் நடைபெற்ற கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியில், நான்கு சீன நிறுவனங்கள், 70க்கும் அதிகமான கட்டுமான இயந்திரங்களை காட்சிப்படுத்தி, ஆதிக்கம் செலுத்தின. சேனி, லியூகாங், ஜூமில்லன், டிங்லி ஆகியவை இந்த நான்கு நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் உயரமான 'கிரேன், பூம் லிப்ட்' முதல், நிலத்தை துளையிடும் 'டிரில்லிங் ஜிக்' வரை, பல்வேறு இயந்திரங்களை காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்தன.
சேனி
'சேனி இந்தியா' நிறுவனம், மொத்தம் 28 கட்டு மான இயந்திரங்களை காட்சிப்படுத்தி, 8 புதிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. கிரேன், பூம் லிப்ட், எக்ஸ்கவேட்டர், கான்கிரீட் பேவர், டிரில்லர், குழி தோண்டும் 'டிரெஞ்ச் கட்டர்' இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. சுரங்க டிப்பர் மற்றும் 'ரீச் ஸ்டாக்டர்' ஆகிய இரண்டு இயந்திரங்கள் மட்டும், மின்சார வகையில் வந்துள்ளது.
இந்த நிறுவனம், 2002 முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இதன் ஆலை, புனேவில் உள்ள சாக்கன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 25,000க்கும் அதிகமான கட்டுமான இயந்திரங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 'கிரேன், பில்லிங் ரிக்' ஆகிய இயந்திர பிரிவுகளில் முன்னணி வகிக்கிறது.
லியூகாங்
'லியூகாங் இந்தியா' நிறுவனம், 28 கட்டுமான இயந்திரங்களை காட்சிப்படுத்தி, 10க்கும் மேற்பட்ட மின்சார இயந்திரங்களை, ஒரே நாளில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 'எக்ஸ்கவேட்டர், வீல் லோடர், பூம் மற்றும் சிசர் லிப்ட், ரீச் ஸ்டாக்டர், போர்க் லிப்ட்' உள்ளிட்ட இயந்திரங்கள் இதில் அடங்கும். இந்த நிறுவனம், 2002ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இதன் உற்பத்தி ஆலை மத்திய பிரதேசத்தின் பித்தாம்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை கட்டமைப்பு, சுரங்கம், ஹைட்ரோ பவர், துறைமுக பயன்பாடு ஆகிய பணிகளுக்கு இயந்திரங்களை தயாரிக்கிறது. சென்னை மற்றும் இந்தோரில், பிரத்யேக உதிரிபாக கிடங்குகளை அமைத்துள்ளது.
லியூகாங் நிறுவனம், பிரத்யேகமாக 'கிரீன் ஜோன்' என்ற தனி அரங்கத்தையும் அமைத்திருந்தது. இதில், இந்நிறுவனத்தின் 12 மின்சார இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஜூமில்லன்
'ஜூமில்லன்' நிறுவனம், மொத்தம் ஆறு இயந்திரங்களை காட்சிப்படுத்தியது. இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் அதிக எடையுடனும், உயரமாகவும் இருந்தன. டவர் மற்றும் மொபைல் கிரேன்கள், டிரில்லர், பூம் லிப்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தியாவில், 2003ம் ஆண்டில் நுழைந்த ஜூமில்லன் நிறுவனம், டவர் கிரேன்கள், மொபைல் கிரேன்கள் மற்றும் கான்கிரீட் இயந்திரங்கள் தயாரித்து வருகிறது. சென்னை, புதுடெல்லி, மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் இதன் பராமரிப்பு மையங்கள் அமைந்துள்ளன.
டிங்லி
டிங்லி நிறுவனம், 11க்கும் மேற்பட்ட இயந்திரங்களை காட்சிப்படுத்தியது. இவற்றில் டெலிஸ்கோப்பிக் பூம் லிப்ட், சிசர் லிப்ட், வெர்ட்டிக்கல் லிப்ட் உள்ளிட்ட பூம் லிப்ட் இயந்திரங்களும் அடக்கம். நாட்டின் முதல் மின்சார பூம் லிப்ட் இயந்திரத்தை இந்நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது.
டிங்லி நிறுவனம், 2005ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகின்றது. உயரத்தில் பணி செய்யும் இயந்திரங்களை தயாரிப்பது இதன் சிறப்பு. இந்தியா முழுதும், 600க்கும் அதிகமான இயந்திரங்களை பல்வேறு பணிகளுக்கு வழங்கி உள்ளது. இந்தியா உட்பட, 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் செயல்படுகின்றது.
சிசர் லிப்ட் (ஜே.சி.பி.டி., 1823 ஆர்.டி.எல்.,)
டெலஸ்கோபிக் பூம் லிப்ட் (இசட்.டி., 72 ஜெ - வி)
மின்சார டிப்பர் (எஸ்.கே.டி., 105இ)
லியூகாங் மின்சார ரீச் ஸ்டாக்டர்