
ஓ.எம்.சி., பவர் நிறுவனத்தில் ஹோண்டா மோட்டார் முதலீடு
ந ம் நாட்டின் ஓ.எம்.சி., பவர் நிறுவனத்தின் 5 முதல் 10 சதவீத பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா மோட்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஓ.எம்.சி., பவர், வரும் 2028க்குள் அதன் உற்பத்தி திறனை ஒரு கிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் மின்சார வாகன பேட்டரிகளை, பேட்டரி சேமிப்பு அமைப்புகளாக பயன்படுத்தும் முயற்சியிலும் நிறுவனம் இறங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஹோண்டா நிறுவனம், ஓ.எம்.சி., பவரில் இன்னும் கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'புகையிலை பொருட்கள் மீது
கூடுதல் ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது'
பு கையிலை பொருட்கள் மீது கூடுதல் ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவற்றுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக இழப்பீடு செஸ் என்ற பெயரில், ஒவ்வொரு புகையிலை பொருட்களின் அடிப்படையில் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.
எனவே இப்பொருட்களுக்கான மொத்த வரிச் சுமை 40 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ளது. இந்நிலையில், இழப்பீடு செஸ் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருவதால், இதை ஈடுகட்ட ஜி.எஸ்.டி., உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரிகள் ஜி.எஸ்.டி., உயர்த்தப்படாது என்றும், ஆனால் வரிச் சுமையை இதே அளவில் வைத்திருக்க புதிய மத்திய வரி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஏற்றுமதி மதிப்பு
மின்னணு பொருட்கள்
3ம் இடம்
புதுடில்லி, அக். 28-
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவிலிருந்து அதிக மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில், மின்னணு பொருட்கள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் ஏற்றுமதி அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் ஐந்தாவது இடத்தில் இருந்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, நகை மற்றும் ரத்தின கற்கள் மற்றும் ரசாயன பொருட்களின் ஏற்றுமதியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 42 சதவீதம் உயர்ந்து 1.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

