ADDED : ஏப் 30, 2025 10:57 AM

புதுடில்லி; அட்டாரி -- வாகா எல்லை மூடப்பட்டுள்ளதால், ஆப்கனில் இருந்து உலர் பழங்கள் இறக்குமதி குறைந்து, இந்தியாவில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக, இறக்குமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவுக்கு பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முக்கிய நாடாக உள்ளது.
பாகிஸ்தானில் இருந்தும் உலர் பழங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி -- வாகா எல்லை மூடப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில், இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும், தன் பகுதி வாயிலாக, மூன்றாவது நாடு வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்தது. சாலை மார்க்கமாக எல்லைகளை மூடியிருப்பதால், ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்கள் வரத்து குறைய உள்ளது. இதனால், இந்தியாவில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.