புதிய விதிமுறையால் ஓ.டி.பி., வர தாமதம் ஆகலாம் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
புதிய விதிமுறையால் ஓ.டி.பி., வர தாமதம் ஆகலாம் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ADDED : அக் 26, 2024 04:07 AM

புதுடில்லி:தீபாவளியை கொண்டாடிய கையோடு, மறுநாள் முதல் செல்போனில் பணம் அனுப்பியோ, படிவம் நிரப்பியோ ஓ.டி.பி., உடனே வராவிட்டால், பதற்றப்பட வேண்டாம். பரிவர்த்தனை மற்றும் ஓ.டி.பி., தகவல்களின் பாதுகாப்புக்கான புதிய விதிமுறை நவ., ௧ம் தேதி முதல் அமலுக்கு வருவதே அதற்கு காரணம்.
தொலைத்தொடர்பு கண்காணிப்பு அமைப்பான டிராய், செல்போன் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
'ஒயிட்லிஸ்ட்' எனப்படும் முறையின்கீழ், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முதன்மை நிறுவனங்கள், அவர்களது டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் யார் என்பதை, அவர்கள் அனுப்பும் ஓ.டி.பி.,யை வைத்து அடையாளம் காண்பதை, தொலைபேசி நிறுவனங்களுக்கு டிராய் கட்டாயமாக்கியுள்ளது.
உதாரணமாக, அனுப்பப்படும் தகவலில், திரும்ப அழைக்கக்கூடிய எண், வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த எஸ்.எம்.எஸ்., தடை செய்யப்படும். வாடிக்கையாளரின் போனில் டெலிவரி ஆகாது.
அதன்படி, நவ., ௧ம் தேதி முதல் அனுப்பப்படும் ஓ.டி.பி.,க்கள் தொலைபேசி நிறுவனங்களால் வடிகட்டப்பட்டு, அனுப்புனர் சரிபார்க்கப்பட்ட பிறகே வாடிக்கையாளரின் செல்போனில் வந்து சேர வேண்டும். உரிய அடையாளமில்லாத ஓ.டி.பி.க்கள், எஸ்.எம்.எஸ்.,கள் நிராகரிக்கப்படும்.
முதல் சில வாரங்களுக்கு, இதை சரிபார்க்கும் நடைமுறையில் தொலைபேசி நிறுவனங்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால், முன்புபோல பொத்தானை அழுத்தியதும் ஓ.டி.பி., வராத நிலை ஏற்படக்கூடும். வங்கிகள் உள்ளிட்டவை அனுப்பும் நம்பகமான, சரியான ஓ.டி.பி.,யும் சரிபார்க்கப்படும் என்பதால், அவை செல்போனுக்கு வந்து சேர்வதிலும் தடங்கல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
ஆனால், இதை அமல்படுத்த மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்குமாறு, டிராயை, டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தின. தொலைபேசி நிறுவனங்களும் ஒரு மாத அவகாசமாவது வழங்கி, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டன. எனினும், அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் இதை செய்ய இயலும் எனக் கூறி, கெடுவை நீட்டிக்க டிராய் மறுத்து விட்டது.
இதையடுத்து, திட்டமிட்டபடி, நவ., ௧ம் தேதி முதல், புதிய விதிமுறை அமலுக்கு வருவதால், பணப்பரிவர்த்தனை மற்றும் தேவையற்ற டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.,கள் தடுக்கப்பட இருப்பது வாடிக்கையாளரின் பாதுகாப்பை அதிகரிக்கும். அதேநேரம், இது சீரான நிலையை எட்டும் வரை, ஓ.டி.பி., உள்ளிட்ட எஸ்.எம்.எஸ்.கள் வர ஏற்படும் கால தாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
170 கோடி
இந்தியாவில் தினமும் பரிமாறப்படும் வர்த்தக எஸ்.எம்.எஸ்.,கள்
5,500 கோடி
ஒரு மாதத்தில் பரிமாறப்படும் சராசரி எஸ்.எம்.எஸ்.,கள்
45 நாட்கள்
புதிய விதிகளை அமல்படுத்திய விபரங்களை அனுப்ப நிறுவனங்களுக்கு அவகாசம்