ADDED : ஜன 09, 2025 01:36 AM

புதுடில்லி:அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்களை தொடர்பு கொள்வதற்கு மத்திய அரசு தொடங்கிய இ-ஷ்ரம் இணையதளத்தின் சேவை 22 மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இ-ஷ்ரம் இணையதளத்தின் 22 மொழிகளில் சேவையை மத்திய தொழிலாளர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டில்லியில் துவக்கி வைத்தார்.
இணையதளத்தில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை தொழிலாளர்கள் தங்கள் மொழியில் பார்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, பாஷினி திட்டம் என்ற பெயரில், இ-ஷ்ரம் இணையதளத்தில் 22 மாநில மொழிகளில் பயன்படுத்த வசதியை ஏற்படுத்திஉள்ளது.
முன்னதாக, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடா, மராத்தி மொழிகளில் மட்டும் செயல்பட இ - ஷ்ரம் இணையதளம், இனி மற்ற மொழிகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் சேவை தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

