தென்னை நார் பொருட்களுக்கு வணிக குறியீடு பெற முயற்சி
தென்னை நார் பொருட்களுக்கு வணிக குறியீடு பெற முயற்சி
ADDED : ஜூன் 03, 2025 11:58 PM

சென்னை:தமிழகத்தில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, தனித்துவமான வணிக குறியீடு பெறுவதற்கான பணிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில், தென்னை நாரில் மிதியடி, தரைவிரிப்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை காணப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகாரம் பெறும் வகையில், தனித்துவமான வணிக குறியீடு பெற்று தொழில் நிறுவனங்களுக்கு வழங்க, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்றுமதிக்காக தமிழகத்தில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களுக்கு ஒரு தனித்துவமான, 'பிராண்டிங்' எனப்படும் வணிக குறியீடு உருவாக்கப்படும். இதற்கான, 'லோகோ' உருவாக்கும் பணியை கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் துவக்கியுள்ளது. இந்திய அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம் விண்ணப்பித்து, இந்தாண்டுக்குள் வணிக குறியீடு பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பில, 7,500 நிறுவனங்கள்
தமிழக அரசிடம் பதிவு பெற்று செயல்படும் நிறுவனங்கள் 5,300