கங்கைகொண்டான் எஸ்.இ.இசட்., நில ஒதுக்கீடை ரத்து செய்யும் 'எல்காட்'
கங்கைகொண்டான் எஸ்.இ.இசட்., நில ஒதுக்கீடை ரத்து செய்யும் 'எல்காட்'
ADDED : மே 05, 2025 11:10 PM
புதுடில்லி :'எல்காட், சிப்காட்' உட்பட நான்கு நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களில் குறிப்பிட்ட பகுதியை ரத்து செய்ய ஒப்புதல் கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில், தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்கு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மண்டலம் அமைப்பதற்காக 80.88 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் 2.40 ஹெக்டேர் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு எல்காட் விண்ணப்பித்துள்ளது.
அதேபோல தமிழக அரசின் சிப்காட் நிறுவனமும், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறிப்பிட்ட பகுதியை ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது.
இவை தவிர, டாடா ஸ்டீல் எஸ்.இ.சி., நிறுவனம், ஒடிசா மாநிலம் கோபால்பூரில் ஒதுக்கப்பட்டுள்ள 588.65 ஹெக்டேர் நிலத்தில் 282.73 ஹெக்டேரை திருப்பி எடுத்துக்கொள்ளவும்; இன்போசிஸ் நிறுவனம் மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் ஒதுக்கப்பட்டுள்ள 52.64 ஹெக்டேரில், 20.23 ஹெக்டேரை திருப்பி எடுத்துக்கொள்ளவும் விண்ணப்பித்துஉள்ளன.
அனைத்து நிறுவனங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக நில ஒதுக்கீட்டை ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளன.
வரும் 9ம் தேதி, மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சக குழுக்களுக்கு இடையேயான கூட்டத்தில், இந்த விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, வருமான வரி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

