UPDATED : ஜூலை 09, 2025 10:47 AM
ADDED : ஜூலை 09, 2025 12:33 AM

புதுடில்லி: வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான மின்சார வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், மின்சார வாகன விற்பனை, 28.60 சதவீதம் அளவுக்கு, பெரும் ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த ஆண்டு, ஜூனில், 1.40 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஜூனில், 1.80 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மின்சார இருசக்கர வாகன விற்பனையில், டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்தில் நீடிக்கிறது. இதை தொடர்ந்து, பஜாஜ், ஓலா, ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்கள் பின் தொடர்கின்றன.
டி.வி.எஸ்., நிறுவனம், 25,300 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, 24.01 சதவீதம் சந்தை பங்கை வைத்துள்ளது.
மின்சார கார் மற்றும் வர்த்தக வாகன விற்பனையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. மின்சார கார் விற்பனையில், ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனம் 168.38 சதவீதமும், மஹிந்திரா நிறுவனம் 523.25 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனம் 712.90 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
ஆனால், டாடா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, வெறும் 2.48 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக, 4,708 மின்சார கார்களை, டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
மூன்று சக்கர வாகன பிரிவில், மஹிந்திரா நிறுவனம் முதல் இடத்திலும், பஜாஜ் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மஹிந்திரா நிறுவனம், 7,316 மூன்று சக்கர வாகனங்களையும், பஜாஜ் நிறுவனம், 6,478 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.

