ADDED : டிச 30, 2024 11:54 PM

புதுடில்லி: டிசம்பர் 29 வரையிலான தேசிய வாகன பதிவேடு தரவுகளின் படி, நடப்பு ஆண்டில், மின் வாகன விற்பனை 26.50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில், 15 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், நடப்பு ஆண்டில், 19.40 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மொத்த வாகன விற்பனையில், கடந்த ஆண்டில் 6.39 சதவீதமாக இருந்த மின் வாகனங்களின் பங்கு, நடப்பு ஆண்டில் 7.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 2024ல் விற்பனையான 12.43 எரிபொருள் வாகனங்களுக்கு, சராசரியாக ஒரு மின் வாகனம் வீதம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
வாகன விற்பனையில் பெட்ரோல் வாகனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நடப்பு ஆண்டில் விற்பனை ஆன வாகனங்களில், பெட்ரோல் வாகனங்கள் 73.69 சதவீதமும்; டீசல் வாகனங்கள் 10.50 சதவீதமும்; இதர எரிபொருள் வாகனங்கள் 9.87 சதவீதமும் விற்பனையாகி உள்ளன.
அதாவது, 1.91 கோடி பெட்ரோல் வாகனங்கள், 26.20 லட்சம் டீசல் வாகனங்கள், 25.60 லட்சம் இதர எரிபொருள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும், மின் வாகன விற்பனை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, அக்டோபரில் 2.19 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு, மத்திய அரசின் 'பி.எம்., இ - டிரைவ்' திட்டத்தின் அறிவிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
12 வாகனங்களுக்கு ஒரு மின்வாகனம் என்ற ரீதியில் விற்பனை ஆகியுள்ளது