20,000 ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குகிறது மின் வாரியம்
20,000 ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குகிறது மின் வாரியம்
ADDED : ஜன 31, 2024 12:07 AM

சென்னை:தமிழக மின் வாரியம், வீடு, கடை உள்ளிட்ட மின் இணைப்புகளில் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர் பொருத்தியுள்ளது. அனைத்து பிரிவுகளிலும் காலை, மாலையில் மின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.
எனவே, காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரையும்; மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும் உச்ச நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்கனவே உள்ள மின் கட்டணத்துடன் கூடுதலாக, 25 சதவீதம் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் சிறு தொழிற்சாலைகளுக்கும் உச்ச நேரத்தில், 15 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதை ரத்து செய்யுமாறு தொழில் துறை கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் சிறு தொழிற்சாலைகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை, உச்ச நேர மின் கட்டணம் வசூலிக்கப்படாது என்று, கடந்த ஆண்டு நவம்பரில், தமிழக அரசு அறிவித்தது.
தற்போது, சிறு தொழிற்சாலைகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.
அந்த மீட்டரில் தானாகவே மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்படும்.
குறித்த தேதி வந்ததும் மின் பயன்பாடு கணக்கெடுத்து, நுகர்வோருக்கு மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
மின் வாரியம், 25,000 சிறு தொழிற்சாலைகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தற்போது 20,000 ஸ்மார்ட் மீட்டர் வாங்கும் ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது.