'மின்னணு பொருட்கள் விற்பனை புத்தாண்டில் 15% வளர்ச்சி காணும்': ஏ.ஐ., வசதியுள்ள பொருட்களுக்கு வரவேற்பு
'மின்னணு பொருட்கள் விற்பனை புத்தாண்டில் 15% வளர்ச்சி காணும்': ஏ.ஐ., வசதியுள்ள பொருட்களுக்கு வரவேற்பு
ADDED : ஜன 01, 2025 07:21 AM

புதுடில்லி : 'வருமானம் அதிகரிப்பு காரணமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ள மின்னணு பொருட்களை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் விற்பனை, 10 முதல் 15 சதவீத வளர்ச்சி காணும்' என நுகர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் வினியோக தொடர் தடைபடுதல் ஆகிய சவால்களை கடந்து, தற்போது தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் உதவியுடன் நுகர்வோர் மின்னணு பொருட்கள் சந்தை மீண்டு வருகிறது. நாட்டின் ஜி.டி.பி.,யில் 0.60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள நுகர்வோர் மின்னணு பொருட்கள் துறை, பிரீமியம் தயாரிப்புகளை நோக்கி நகர்வதால், சராசரி விற்பனை விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மக்களின் வருமானம் அதிகரித்து வருவதுடன், இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் இதற்கு காரணமாக உள்ளது. இது தவிர, பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மின்னணு பொருட்கள் நுகர்வு அதிகரித்திருப்பது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.
மேலும், உள்நாட்டில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

