ADDED : பிப் 14, 2024 01:27 AM

சென்னை:''இந்தியாவில் இருந்து நடப்பு நிதியாண்டில் கடந்த டிச., வரை, 6.63 லட்சம் கோடி ரூபாய்க்கு, இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன,'' என, இந்திய இன்ஜினியரிங் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் அருண்குமார் கரோடியா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்திய இன்ஜினியரிங் பொருட்களுக்கு வட அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன.
ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, வரும் மார்ச், 4, 5, 6ம் தேதிகளில், கோவை கொடிசியா அரங்கில், சர்வதேச இன்ஜினியரிங் பொருட்கள் கொள்முதல் கண்காட்சி நடக்கிறது.
அதில் பாதுகாப்பு தளவாட துறை, வேளாண் கருவி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள, 50 வெளிநாடுகள் உட்பட, 300 நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள் இடம்பெறும். இன்ஜினியரிங் துறையை சேர்ந்த சர்வதேச உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அரசு பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த கண்காட்சி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகைளை வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

