'ஏற்றுமதி தொழிலுக்கு உதவி மையம் வேண்டும்' அரசுக்கு தொழில்முனைவோர் வலியுறுத்தல்
'ஏற்றுமதி தொழிலுக்கு உதவி மையம் வேண்டும்' அரசுக்கு தொழில்முனைவோர் வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2024 11:36 PM

சென்னை:'வெளிநாடுகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய ஏதுவாக, ஏற்றுமதி தொடர்பான வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்கு உதவி மையமும், அதிகளவில் தர பரிசோதனை மையங்களும் அமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு குறுந்தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி திறன் பயிற்சியை, 'டி.என்.அபெக்ஸ்' எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், சென்னை கிண்டி, 'சிட்கோ' வளாகத்தில் நேற்று நடத்தியது.
இதில், 50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்று, அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
அதன் விபரம்:
தேவா வெங்கடேஷ், விருதுநகர்: முருங்கை, சிறுதானியங்களை பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரித்து, விற்கிறேன். வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதிக்காக பொருட்களை சிறந்த முறையில் பேக்கிங் செய்ய அதிநவீன இயந்திரங்கள் தேவை.
பொருட்களின் தரத்தை பரிசோதிக்க, விருதுநகரில் ஒரே ஒரு தனியார் ஆய்வகம் மட்டுமே உள்ளது. மதுரையில் ஆய்வகம் இருந்தாலும், நவீன வசதி இல்லாததால், சென்னையில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
விருதுநகரில் அரசு ஆய்வகம் அமைப்பதுடன், சமீபத்திய பேக்கிங் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள ஆதரவு அளிக்க வேண்டும்.
பார்த்தசாரதி, சென்னை: என் மனைவி ஊட்டச்சத்து மாவு தயாரித்து விற்கிறார். ஏற்றுமதி செய்வது எப்படி என்று தெரியவில்லை. இதற்கு உதவுவதுடன், நிதி உதவியையும் அரசு வழங்க வேண்டும்.
தினேஷ், அம்பத்துார்: 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமாக துவங்கி, காலை உணவு பொருட்கள், தேன் போன்றவற்றை விற்கிறேன். ஏற்றுமதி தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள அரசின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஒரு புதிய நிறுவனத்தை நடத்துவோரால் ஐந்து, ஆறு நாட்கள் நடக்கும் பயிற்சியில் பங்கேற்பது சிரமம்.
எனவே, கிடைக்கும் நேரத்தில் ஏற்றுமதி தொடர்பான அனைத்து விபரங்களையும் எளிதில் அறியும் வகையில் உதவி மையம் அமைக்க வேண்டும்.
சுதாகர், குரோம்பேட்டை: ஏற்றுமதி செய்யும் போது, அடுத்த மூன்று, ஆறு, 12 மாதங்களுக்கு ஏற்றுமதி தொழிலில் ஏற்றம் இருக்குமா, இறக்கம் இருக்குமா என முன்கணிப்பு செய்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான், அதற்கு ஏற்ப உற்பத்தியை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
கோமதி, சென்னை: நவதானியங்களில் இருந்து, பால் தயாரித்து விற்கிறேன். மகளிர் குழுக்களில் இருந்து வரும் பெண்களுக்கு கல்வி அறிவு குறைவாக இருந்தாலும், பொருட்களை அதிக தரத்துடன் தயாரிக்கின்றனர். அவர்களுக்கு, ஜி.எஸ்.டி., பதிவு செய்வது எப்படி, உணவு தர நிர்ணய சான்று வாங்குவது எப்படி என்ற விபரங்கள் தெரிவதில்லை. அவற்றை வாங்கித் தர உதவ வேண்டும்.
பிரின்ஸ், சிவகாசி: தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை உற்பத்தி செய்து, விற்கிறோம்.
சில நிறுவனங்கள், எங்களிடம் எண்ணெய் வாங்கி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
எங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறை தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.
அது உண்மையான வியாபார அழைப்பு என்று கூட தெரிவதில்லை. எனவே, ஏற்றுமதி தொடர்பான முழு வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு தொழில்முனைவோர்கள் பேசினர்.