காப்பீடுக்கு விலக்கு, சைக்கிளுக்கு குறைப்பு ஜி.எஸ்.டி., மறுஆய்வு கூட்டத்தில் முடிவு அதிக விலை கொண்ட வாட்ச், ஷூ மீது 28% வரி
காப்பீடுக்கு விலக்கு, சைக்கிளுக்கு குறைப்பு ஜி.எஸ்.டி., மறுஆய்வு கூட்டத்தில் முடிவு அதிக விலை கொண்ட வாட்ச், ஷூ மீது 28% வரி
ADDED : அக் 20, 2024 02:02 AM

புதுடில்லி:ஆயுள் காப்பீடு, மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடுக்கு ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்யவும், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஷூக்கள் மீதான வரியை 28 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைக்க, ஜி.எஸ்.டி., மறுஆய்வு அமைச்சர்கள் குழு முடிவு செய்துஉள்ளது.
டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., மறுஆய்வுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கலாம். தற்போது இதற்கு 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 'டேர்ம் இன்சூரன்ஸ்' எனும் ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கும் விலக்கு அளிக்கலாம்.
அத்துடன் 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன், சைக்கிள், பயிற்சி நோட்டுப்புத்தகங்கள் மீதான வரியை ஐந்து சதவீதமாக குறைக்கலாம். 20 லிட்டர் கேன் குடிநீர் மீது 18 சதவீத வரியும், சைக்கிள் மீது 12 சதவீத வரியும் தற்போது அமலில் உள்ளது.மேலும், 25,000 ரூபாய்க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்கள், 15,000 ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஷூக்கள் ஆகியவற்றுக்கு வரியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகஅதிகரிக்கலாம்.இவ்வாறு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அடுத்த மாதம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.