ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு ஏற்றுமதியாளர்கள் உறுதி
ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு ஏற்றுமதியாளர்கள் உறுதி
ADDED : ஜூலை 05, 2026 02:31 AM

திருப்பூர்: ஒரு டிரில்லியன் டாலர் (95 லட்சம் கோடி ரூபாய்) ஏற்றுமதி இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) வரவேற்றுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் டில்லியில் நேற்று முன்தினம் வர்த்தக வாரிய கூட்டம் நடைபெற்றது. தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ''பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நடப்பு 2026 - -27 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர் (95 லட்சம் கோடி ரூபாய்) இலக்கை அடையும். இந்தியா, 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதால், உலகின் வளர்ந்த நாடுகளில் 65 சதவீதம் நமது வர்த்தக வளையத்திற்குள் வந்துள்ளன. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளன,'' என்றார்.
இதில் பங்கேற்ற ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் கூறுகையில், “தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்ட உதவும். இதற்கு நாங்கள் துணை நிற்போம். சர்வதேச சவால்களை சமாளிக்க, 'பேக்கிங் கிரெடிட்' வட்டி மானியத்தை 2.75ல் இருந்து 5 சதவீதமாக உச்சவரம்பின்றி உயர்த்த வேண்டும்'' என்றார்.
