'பால்கன் 2000' விமானங்கள் இந்தியாவில் தயாரிக்க முடிவு
'பால்கன் 2000' விமானங்கள் இந்தியாவில் தயாரிக்க முடிவு
ADDED : ஜூன் 19, 2025 12:17 AM

புதுடில்லி:அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்சர்' நிறுவனம், பிரான்சின் 'டசால்டு ஏவியேஷன்' நிறுவனத்துடன் இணைந்து, 'பால்கன் 2000' வணிக விமானங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள டி.ஆர்.ஏ.எல்., எனும் டசால்டு ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வசதியில், இதற்காக பிரத்யேக ஆலை அமைக்கப்பட உள்ளது. இரு நிறுவனங்களும், கடந்த 2017 முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2019 முதல், பால்கன் 2000 விமானத்தின் பல்வேறு பகுதிகளை ரிலையன்ஸ் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கு பால்கன் ரக விமானங்களுக்கான சிறப்பு மையமும் அமைக்கப்பட உள்ளதாகவும்; பால்கன் 6 எக்ஸ், 8 எக்ஸ் ரக விமானங்களின் அசெம்பிளிங் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்கு வெளியே டசால்டு ஏவியேஷன், 'பால்கன் 2000' விமானங்களை தயாரிப்பது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக வணிக விமானங்களை தயாரிக்கும் ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
தற்போது வரை அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் மட்டுமே வணிக விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் 'பால்கன் 2000' விமானம், வரும் 2028ம் ஆண்டு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.