ADDED : செப் 14, 2025 08:23 PM

பெரும்பாலான இந்திய குடும்பங்கள் மாதாந்திர செலவுகளை சமாளிக்க திணறி வருவதும், அதிகரிக்கும் விலைவாசியை எதிர்கொள்ள பெரும்பாலானோர் செலவுகளை கட்டுப்படுத்தி வருவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய குடும்பங்களின் செலவு பழக்கத்தை அறியும் வகையில், 'வேர்ல்டு பேனல் இந்தியா' நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த மூன்று ஆண்டுகளில் குடும்பங்களின் காலாண்டு சராசரி செலவு, 33 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
கிராமப்புற மற்றும் குறைந்த வருமான பிரிவினர் இந்த போக்கால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரிவினர் மத்தியில் கடந்த ஓராண்டில் மட்டும் சராசரி செலவு, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேர், செலவுகளை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி வருவதாகவும்; இன்னும் பலர், வாழ்வியல் செலவுகளை தள்ளிப்போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் வருமானம் கிடைத்தால், அதை சேமிப்பிற்கு பயன்படுத்துவோம் என்று 50 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே கூடுதல் வருமானத்தை வாழ்வியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.